சித்தர்கள் கண்ட சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் சித்தர்கள்-சிற்றின்ப வாழ்வை விடுத்துப் பேரின்ப வாழ்வை நாடியவர்கள். எனவே பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சாகாக் கல்வி என்ற புதிய கல்வி முறையை உலகுக்கு அறிமுகப் படுத்தினார்கள். இக்கல்வி முறை உடலை உறுதி செய்யவும், மனத்தின் திறத்தை வளர்க்கவும் வழிகளைக் கூறுகிறது. இக்கல்வி முறையில் மருந்துகள்-மந்திரங்கள்,


ரசவாதம்-வாசியோகம் முதலிய பகுதிகளையும் காணலாம். சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே சித்த மருத்துவம் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், சிறகுகள், நவரத்தினங்கள், கொம்புகள், சங்குகள், சிப்பிகள், நவலோகங்கள், பாஷாணங்கள் முதலியவற்றை மருந்தாக்கும் திறன்பெற்றிருந்தது எனலாம்.
இன்றைய நவீன மருத்துவம் அவற்றில் மூலிகைகள், சிப்பி பற்பம், மான்கொம்பு பற்பம் போன்றவற்றை ஆராய்ந்து உருவாக்கி வருகிறது. எனவே சாகாக் கல்வியில் வரும் காயகற்பம், கற்ப மருந்துகளை அறிவியல் நுணுக்கத்தோடு ஆராய்ந்தால் பல அரிய உண்மைகள் வெளியாகலாம்.

சித்த மருத்துவமும் - ரசவாதக் கலையும்

மட்டமான உலோகங்களைத் தங்கமாக்கும் முறையே ரசவாதம் எனப்பட்டது. உயர்ந்த மருந்துகளைச் செய்யவும்-மருத்துவ நுட்பங்களை அறியவும் ரசவாதம் செய்யப்பட்டது. தங்கம் செய்வது மட்டுமே சித்தர்களின் குறிக்கோள் எனில் பொருந்தாது. கண்டுபிடித்தற்கரிய மருந்தான முப்பு-என்ற மருந்தின் தரத்தை அறிய உதவும் சோதனைப் பொருளாகவே ரசவாதத்தைச் சித்தர்கள் மதித்தனர் எனலாம். முப்பு-என்ற மருந்து சரியாக முடிக்கப் பட்டிருந்தால் அது மற்ற உலோகங்களைத் தங்கமாக்க உதவும். ரசவாதம் சரியாக முடியாவிட்டால் முப்பு மருந்தில் குறையுள்ளது என அறிந்தனர்.

ரசவாதம் செய்யப் பாதரசம் முக்கியப் பொருளாக இருந்துள்ளமை தெரிகிறது. இந்தப் பாதரசத்தை முப்பு என்ற மருந்தால் கட்டுப்படுத்தி நெருப்பிலிட்டால் புகைந்து போகாமல் ஈயம்போல் உருகிக் கெட்டிப்படும் தன்மைக்குக் கொண்டு வந்து, பிறகு மருந்தாகச் செய்து அதை உருகும் செம்பு அல்லது வெள்ளி போன்ற உலோகங்களில் சேர்க்கச் செய்து, அது தங்கமாக மாறும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ரசவாதம் எனும் வேதியியல் முறையைச் சித்தமருத்துவம் அறிந்திருந்தது எனலாம்.

சித்த மருத்துவத்தில் 'குரு'- மருந்துகள்
'குரு' என்பவர் மாணவர்களின் அறியாமை இருளைப் போக்குபவர் எனலாம். குரு மருந்துகள் மற்ற மருந்துகளின் குறைகளைக் களைந்து-உயர்ந்த சக்தியை அம்மருந்துகளுக்குத் தருகின்றன. சித்த மருத்துவத்தில் பல்வேறு குரு மருந்துகள் கூறப்பட்டுள்ளன. கட்டியசாரம்-கண்டர்வெளுப்பு-மட்டியகாரம் வழங்கிய வீரம் முதலியவற்றை ஒட்டி அரைக்க உயர்ந்த குருவாகும் எனச் சொல்லப்பட்டுள்ளது. குரு மருந்துகளின் தலைமை நிலையில் முப்புகுரு சொல்லப்பட்டுள்ளது.

'முப்பு' குரு :
முப்பு-என்றால் என்ன என்பதில் சித்த மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதை அறியலாம். ஆயினும் சித்த மருத்துவத்தில் முப்பு - என்ற பொருள் உயிர் போன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பு சேராத மருந்துகள் உயிரற்ற உடல்களாகவே கருதப்படும். பல்வேறு சித்த மருந்துகள் குறிப்பிட்டுள்ள வண்ணம் குணம் தராமல் இருப்பதற்கு முப்பு மருந்து சேராததே காரணம் என அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் கூறுவதைக் காணலாம்.

இதனை உறுதிப் படுத்தும் வகையில் சித்தர்கள் பலர் தமது நூல்களில் முப்பு மருந்தின் பெருமையைப் பாடியுள்ளதைக் காணலாம். 'முப்பு' - என்ற பொருள் குரு மருந்தாக மட்டுமன்றி உடலைக் காக்கும் அருமருந்தாகவும் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.

"முப்பு" என்பது மூன்று உப்புக்களின் சேர்க்கை என்பது பல பாடல்களால் அறியப்படுகிறது. சிலர் இந்துப்பு-வெடியுப்பு-பூநீர் முதலியவை முப்பு என்கின்றனர். சிலர…
தமிழ்முறை மருத்துவம்
DR.J.PERUMAL.

தமிழ்முறை மருத்துவம் என்பது சித்த வைத்தியம் என்ற பெயரில் தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டில் நடைமுறையில் கையாளப்பட்டு வருகிறது. இதனை நாட்டு மருத்துவம் அல்லது பாட்டி வைத்தியம் என்று அழைக்கின்றனர். இந்த மருத்துவமானது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் தீராத நோய்களான புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களுக்கும் முழுமையான நிவாரணம் அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. மருந்துகள் இருந்தாலும் கொடிய நச்சுத்தன்மை உடையவைகளாக இருக்கின்றன.

தமிழ்முறை வைத்தியம் நலிவுற்ற நிலையில் இருக்கிறது. இது தமிழ் மக்களின் உயர்ந்த அறிவுத்திறனை, அவர்களின் பண்பாட்டை விளக்கவல்ல அச்சுப் பிரதியாக அமைந்திருந்தாலும், காலப்போக்கில் இதன் சிறப்பு பல காரணங்களால் குன்றிவிட்டது. வியாபார ரீதியாகச் சில சித்த மருத்துவர்கள் நற்குணம் கொண்ட பல மருந்துகளைப் பரம இரகசியமாகக் காத்து, அவர்கள் ஆயுட் காலத்துடன் அந்த அரிய பொக்கிஷங்களும் பலருக்கும் தெரியாமல் அவர்களோடு அழிந்துவிட்டன. மேலும் இம் மருந்துகளைப் பற்றி எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் சரியானபடிப் பராமரிக்கப் படாததினாலும், யுத்தம், வெள்ளம், தீ போன்ற ஊறுகளினாலும் அழிந்துவிட்டன.

வேறு சிலர் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பல கலப்பட மருந்துகளைக் கலந்தும், மருந்தின் தன்மையை மிகப்படுத்திப் பிரச்சாரம் செய்தும், இந்த அரிய மருத்துவத்திற்கு மாசு கற்பித்து விட்டனர். ஆகவே, மக்களிடையே நம்பிக்கை என்ற கருப்பொருள் இந்தச் சிறந்த மருத்துவத்திற்குக் கிடைக்கவில்லை. மேலும் ஏடுகளைப் படித்து மருந்துகளுக்கு விளக்கம் காணுதல் மிகக் கடினமான செயலாகும். ஏனெனில் பல மருந்துகள் சிலேடை மொழிகளில் தரப்பட்டிருப்பதால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை இல்லாதவர்கள் இவைகளைப் படித்துத் தெளிந்த கருத்துக்களைப் பெற முடியாததால் இவர்கள் செய்கின்ற மருத்துவம் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. இதனால் சித்த மருத்துவத்தின் தனித் தன்மையும் மாசுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் சித்த மருத்துவர்களுக்கு நூல்களில் சொல்லப்பட்ட பல மூலிகைகள் கிடைப்பதில்லை. இதுவும் கலப்படத்திற்கு ஒரு காரணமாகும்.

சித்த மருத்துவச் சிறப்பை வெளிக்கொண்டு
வருவது எப்படி?
இந்த வினாவானது எல்லாத் தமிழர்களின் உள்ளத்திலும் எழக்கூடியது. ஏனெனில் சித்த மருத்துவம் பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஓர் அரிய கலை. அதன் பயனை இன்று நாம் அறியத் தலைப்படுவது இயற்கைதான். தற்கால அறிவியல் வளர்ந்து, செழிப்புற்று, பல கோள்களில் மனித நாகரிகத்தை நிலைப்படுத்தத் துடிக்கிறது. ஆகவே, வளர்ந்த அறிவியல் அறிவைக் கொண்டு நமது அரிய மருந்துகளின் சிறப்பினை நவீன ஆய்வின் மூலம் உலகுக்கு எடுத்தியம்ப இயலும். எனவே, தற்போது நவீன மருத்துவக் கருவிகள் வாயிலாக ஆய்வு நடத்தி அதன் மூலம் வெளிவரும் கருத்துக்கள் நடைமுறைக்கு ஒப்புதலாக அமைந்துள்ளது. .


இது தொடர்பான ஆராய்ச்சிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?

சில சித்த நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடிசெய்து, எலி, முயல் மற்றும் கினிப்பன்றி போன்ற விலங்குகளில் வெவ்வேறு நோயினை உண்டுபண்ணி இவைகளுக்கு இம்மருந்தினைக் கொடுத்து இம் மருந்துகள் எந்த அளவு எடையில் எந்த அளவிற்கு நோயினைக் குணமாக்குகிறது என்பது கண்டறியப்படுகிறது. நோயினைக் குணப்படுத்தும் அளவினை நிருணயித்தும், இது எப்படி நோயினைக் குணப்படுத்துகிறது என்பதைப் பற்றியும் ஆராயப்படுகிறது. இதற்கு உயிர் வேதியல் ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கிறது. மேலும், மூலிகைகளில் பொதிந்திருக்கும் உயிர்ச்சத்துக்கள் யாவை என்றும் ஆராயப்படுகிறது.

மருந்துகள் நோயினைக் குணப்படுத்துவதுடன் மற்ற உறுப்புக்களுக்கு ஊறு விளைவிக்காவிட்டால்தான் சிறந்த மருந்தாகக் கருதப்படும். ஆகவேதான் இம் மருந்துகளை எலி, முயல் போன்ற விலங்குகளுக்குக் குறைந்தகால அளவிலும், பலமாதக் கணக்கிலும் கொடுத்து இவ்விலங்குகளின் உள் உறுப்புக்களை நலிவுறச் செய்கின்றனவா என்பதைக் கண்டறிகிறோம். மேலே சொன்ன சோதனைகளில் இம் மருந்துகள் தேர்ந்துவிட்டால் இம் மருந்துகள் நவீன மருத்துவர்களின் துணைகொண்டு நோயுற்ற மனிதருக்கும் கொடுத்து இம் மருந்துகளின் செயல்திறன் ஆராயப்படுகிறது. மேலும், இம்மருந்துகள் குறிப்பிட்ட நோய் திரும்பவும் நேராமல் தடுக்கின்றனவா என்பதைப் பற்றியும் ஆராயப்படுகிறது.


ஆராய்ச்சி செய்யப்பட்ட அல்லது
ஆய்வுக்குள்ளாகியிருக்கும் மூலிகைகள்
இங்கு இதுவரை ஆய்வுக்குள்ளான மூலிகைகளும் ஆய்வு முடிவுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

நீரிழிவு வியாதியைக் குணப்படுத்தும் மூலிகைகள் :
பருத்திவிதைப் பால் :
குண்டூர் இரகத்தைச் சார்ந்த பருத்தி விதையை இரவில் ஊற வைத்துப் பகலில் அதனை அரைத்து, அதிலிருந்து சாற்றை வடித்து, அப்பாலை 10 மணித்துளிகள் காய்ச்சி, ஒரு கிலோ கிராம் உடம்பு எடைக்கு ஒரு கிராம் பருத்தி விதை என்ற விகிதத்தில் முயல்களுக்குக் கொடுக்கும்போது மூன்று மணி நேரத்தில் குருதியின் சர்க்கரை அளவை 45 விழுக்காடு குறைக்கிறது. இதன் செய்கை இன்சுலின் என்ற நாளமில்லாச் சுரப்பியின் தன்மையை ஒத்ததாக இருக்கிறது.

சர்க்கரை நோய் மனிதர்களின் 15 வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், 40 வயதைத் தாண்டிய பருத்த மனிதர்களுக்கும் வருகிறது. சிறுவயதில் தோன்றும் நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தானது. இதனை ஊசி மூலம் இன்சுலின் செலுத்தியே கட்டுப்படுத்த முடியும்.
தினமும் ஊசிபோட வேண்டியிருப்பதாலும், இம் மருந்தின் விலை அதிகமாக இருப்பதாலும் இம்முறை இலகுவானதாக இல்லை. நடுத்தர வயதில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் ஆபத்தானது இல்லை; எளிதில் கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ மருந்துகள் நீண்டநாள் உட்கொள்ளும்போது தீங்கு விளைவிப்பனவாக உள்ளன. இப் பருத்தி விதைப் பாலை மேலே கூறியபடி அதே அளவில் நீரிழிவு நோயுடைய இரு பிரிவினருக்கும் கொடுக்கும்போது, சிறு வயதினருக்கு 100 விழுக்காடுகள் நிவாரணமும், நடுத்தர, முதிய வயதினருக்கு 71 விழுக்காடு நிவாரணமும் அளிக்கவல்லதாக அமைந்துள்ளது. இரு பிரிவினரிடமும் மருந்து உட்கொண்ட பிறகு மூன்றுமணி நேரத்தில் குருதி அளவு தோராயமாக 50 விழுக்காடு குறைந்துள்ளது.

மூன்று மணி நேரத்தில் குருதியில் உள்ள ஆல்புமின் என்ற புரதச்சத்து கூடியும், பொட்டாசியம், சுண்ணம், பாஸ்பரம் போன்ற அயனிகள் குறைந்தும் காணப்பட்டன. இந்த மாற்றங்கள் இன்சுலின் போன்ற சுரப்புகளினால் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஒத்துக் காணப்படுகின்றன. ஆகவே, பருத்திவிதைப் பாலில் இன்சுலின் போன்ற செய்கைகள் உள்ள உயிர்ச்சத்து இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. இந்த உயிர்ச்சத்தின் வேதியல் அமைப்பைத் தெரிய ஆய்வுகள் நடந்துவருகின்றன.

தென்னங் குறும்பை :
இவையும் சித்த நூல்களில் நீரிழிவு நோயினைக் குணப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தென்னங் குறும்பையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ர்விட்டு அரைத்து சாறு எடுத்து முயலுக்குப் பசியைத் தூண்டிச் சாற்றைக் கொடுக்கும்போது மூன்றுமணி நேரத்தில் 13 விழுக்காடு சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதில் காணப்படும் பொட்டாசியம், புருக்டோஸ் என்ற தேன், சர்க்கரை காரணமாக அமைந்துள்ளது என்று அறியப்படுகிறது.


கீல்வாயுவைக் (Rheumatoid Arthritis)
குணப்படுத்தும் மூலிகைகள்
கீல்வாயுவானது மூட்டுக்களை வீங்கச்செய்து வலியை ஏற்படுத்திக் கை கால்களின் செயல்திறனை இழக்கச் செய்கிறது இதனால் பல்லாயிரக்கணக்கான பணி வேலை நேரங்கள் வீணாகிறதென்றும், இதனால் தொழிற்சாலைகளில் வருமானக் குறைவு நிகழ்கின்ற தென்றும் கணக்கிட்டுள்ளனர். இந்த நோய் திடிரென்று தோன்றித் தானாகக் குணமாகும் தன்மையுடையது. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின், பினைல் டிபூட்டோஸோன், ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் கொடுத்து வருகின்றனர் ஆனால், இம் மருந்துகள் நிரந்தர நிவாரணம் அளிப்பதில்லை. மேலும், இவைகளை உட்கொள்ளும் போது வயிற்றில் புண்ணும், இதயப் பாதிப்பும் ஏற்படுகின்றன.

இந்த நோய்க்குப் பூரண குணத்தை அளிக்கவல்ல மருந்துகள் இருக்கின்றன என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. சித்த மருத்துவர்கள் இந்நோய்க்கு நாட்டு அமுக்கிராக் கிழங்கையும், žமை அமுக்கிராக் கிழங்கையும் கொடுத்து வருகின்றனர்.

அமுக்கிராக் கிழங்கு :
நாட்டு அமுக்கிரா, žமை அமுக்கிரா என்று இருவகை உள்ளன. நாட்டு அமுக்கிராக் கிழங்கு தடித்தும் குட்டையாகவும் இருக்கும். žமை அமுக்கிராக் கிழங்கு மெல்லியதாகவும் நீண்டும் காணப்படும் சித்த மருத்துவத்தில் பொதுவாக இந்த இரண்டையும் அமுக்கிராக் கிழங்கு என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
žமை அமுக்கிராக் கிழங்குதான் வீரியமுள்ளது; உயர்ந்தது என்ற நம்பிக்கை சிலரிடம் நிலவுகிறது. பார்மலின், டர்பன்டைன் போன்ற எரிவூட்டும் பொருட்களை ஊசி மூலம் எலிகளின் காலில் செலுத்தி வீக்கத்தை உண்டுபண்ணலாம். நாட்டு அமுக்கிராக் கிழங்குத் தூளும், žமை அமுக்கிராக் கிழங்குத் தூளும் இந்த எலிகளுக்குக் கொடுக்கும் போது நாட்டு அமுக்கிராக் கிழங்கு மட்டுமே ஆஸ்பிரின் போல ஆறுமணி நேரத்தில் 40-50 விழுக்காடு வீக்கத்தைக் குறைக்கிறது.
žமை அமுக்கிராக் கிழங்கு குளோரோபார்ம் என்ற கரிமத்தினால் பதம் செய்து பயன்படுத்தும்போது வீக்கம் குறைந்து அம்மருந்தினது செய்கை வெளிப்படுகிறது.
நாட்டு அமுக்கிராக் கிழங்கானது, 100 மி.கி / 100 கி. உடல் எடை என்ற அளவு முறையில்தான் மிக நல்லமுறையில் வீக்கத்தைக் குறைக்கிறது. இநத் அளவு கூடும்பொழுது இதன் செயல் குன்றி விடுகிறது. மேலும், நாட்டு அமுக்கிராக் கிழங்கைச் சாதாரண எலிகளுக்குக் கொடுக்கும் போது எவ்வித ஊறும் விளைவதில்லை.

எலிகளுக்கு வீக்கத்தை உண்டுபண்ணித் தாபித நிலையை ஏற்படுத்தும்போது குருதியிலுள்ள 30 வகையான புரதங்களில் 7-10 புரதங்கள் (Acute phase proteins) கூடுகின்றன. இந்தப் புரதங்கள் தாம் வீக்கமானது மேலும் பரவவிடாமல் தடுக்கின்றன. இதுவே வீக்கத்தைக் கட்டுப்படுத்த இயற்கையில் அமைந்த தடுப்புச் சக்தியாகும். குறிப்பாக, 2-கிளைகோபுரோட்டின் என்ற புரதம் நோய் நொடியில்லாத எலியில் காணப்படுவதில்லை. ஆனால் தாபித நிலையில் இந்தப் புரதம் அதிக அளவில் குருதியில் காணப்படுகிறது. ஆகவே இந்தப் புரத அளவைக் கொண்டு தாபித நிலையை அறியலாம்.

நாட்டு அமுக்கிராக் கிழங்கைத் தாபிதமடைந்த எலிகளுக்குக் கொடுக்கும்போது தாபித நிலையில் கூடும் புரத அளவினைக் குறைத்துச் சாதாரண நிலையில் காணப்படும் புரத அளவிற்கு நிலைப்படுத்துகிறது. ஆனால் பினைல் பூடோசோன் வீக்கத்தைக் குறைந்தாலும் தாபித நிலையில் உயர்ந்து காணப்படும் புரதங்களை மாற்றி அமைப்பதில்லை. ஆனால் புதிதாக வெளி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டி-பென்சிலமின் போன்ற மருந்துகள் (D-pencillamine) கீல்வாயுவுக்கு நீண்டநாள் நிவாரணம் அளிப்பதுடன் தாபிதநிலைப் புரதங்களையும் žர்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, மற்ற ஆராய்ச்சியாளர்கள், இம்மருந்தானது வீக்கத்தை மட்டும் கட்டுப்படுத்தாமல் கீல்வாயுவிற்கான அடிப்படைக் காரணங்களையும் மட்டுப்படுத்துகின்றதென்று கூறுகின்றனர்.
நாட்டு அமுக்கிராக் கிழங்கானது வீக்கத்தைக் குறைப்பதோடு தாபித நிலைப் புரதங்களையும் குறையச் செய்வதால் இதன் செயல்திறன் டி-பென்சிலமின் போன்ற மருந்துகளை ஒத்துக் காணப்படுகிறதென்று நிருணயிக்கப்படுகிறது.

தாபித நிலையில் எலிகளின் கல்லீரலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. சக்தி மாற்றங்களை ஏற்படுத்தும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) என்னும் நுண்மத்தில் காணப்படும் நொதியான மக்னீசியத்தால் தூண்டப்படும் அடினோசின் டிரை பாஸ்படேஸ் (Mg++ dependent Adenosine Triphosphatase) தாபித நிலையில் மிக அதிகமாகிக் காணப்படுகிறது. இந்நொதியே தாபித நிலைப் புரதங்களைக் கல்லீரலில் உண்டுபண்ணுவதற்குரிய சக்தியைக் கொடுக்கிறது.
தாபித நிலையில் உள்ள எலிகளுக்கு நாட்டு அமுக்கிராக் கிழங்குத் தூளைக் கொடுக்கும்போது இந்நொதி அளவு குறைந்துவிடுகிறது. இந்தச் செய்கையினாலேயே நாட்டு அமுக்கிராக் கிழங்கு தாபித நிலைப் புரதங்களைக் குறைக்கிறது என்பது அனுமானிக்கப்படுகிறது தாபித நிலையில் கல்லீரல் சர்க்கரைச் சத்து (Live glycogen)குறைந்து காணப்படுகிறது. இம் மூலிகையானது வீக்கத்தைக் குறைக்கும் பொழுது இச்சக்தியினைக் கூட்டுகிறது.

எலிகளின் காலில் பார்மலின் கொடுத்து வீக்கத்தை உண்டு பண்ணும்பொழுது, குடலில் குளுக்கோஸ், சர்க்கரை மற்றும் அமினோ அமிலங்கள் உறிஞ்சப்படும் தன்மை குறைகிறது ஆனால் நாட்டு அமுக்கிராக் கிழங்கு கொடுத்துத் தாபித நிலையைச் žர்செய்யும் பொழுது, குடல், இழந்த உறிஞ்சும் சக்தியை மீண்டும் பெறுகிறது. இந்த வினைத்திறன் ஆக்சிபென் பூயுடோசோன் (Oxyphen butazone) என்ற மருந்தின் செயல்திறனை ஒத்துள்ளது.

மேலும், தாபித நிலையில் குருதியின் அயனிகள் குறைந்தும், A/P, A G போன்ற புரத விகிதங்கள் மாறுதலடைந்தும் உள்ளது. நாட்டு அமுக்கிராக் கிழங்கானது இவைகளை நேர் செய்கிறது. இது போன்ற தாபித நிலையில் மாறுபடும் லைசோசோம் போன்ற நுண்ணணுக்களின் அமைப்பையும், இரத்த சிவப்பணுக்களின் அமைப்பையும், அவைகளின் சவ்வின் அயனித் தன்மையினையும் நாட்டு அமுக்கிராக் கிழங்கு செம்மைப்படுத்துகிறது.

தாபித நிலைக்குக் காரணமாக ஹ’ஸ்டமின், கைனின், புரோஸ் டாகிளான்டின் (Histamine, Kinin, Prostaglandin) போன்ற வேதிமூலங்கள் அமைந்துள்ளன. நாட்டு அமுக்கிராக் கிழங்கு இவைகளின் அளவையும் குறைக்கிறது. நாட்டு அமுக்கிராக் கிழங்குகளைப் பெட்ரோலியம் ஈதர், குளோரோபார்ம், சாராயம், அசிடோன், நீர் போன்றவைகளுடன் சேர்த்துக் காய்ச்சிப் பகுத்துத் பதப்படுத்தும் பொழுது (Sequential extraction with Petroleum ether, chloroform, alcohol, acetone and water in soxhlet apparatus) பெட்ரோலியம் ஈதரில் கிடைக்கக்கூடிய வைத்தாபெரின்-ஏ (Witha ferin-A) என்ற சத்தும், அசிடோனில் கிடைக்கக்கூடிய பிளேவனாய்டல் கிளைகோசைடு என்ற சத்தும் வீக்கத்தை நன்கு குறைக்கிறது. இவைகளை ஒன்றுசேர்க்கும்போழுது இவைகளின் வீரியம் கூடுகிறது.

இதுபோன்று விஷ்ணுகிராந்தி, பீச்சங்கன், அழிஞ்சில், முடக்கறுத்தான், முசாம்வரம், பற்பாடகம், கரிசாலை போன்ற மூலிகைகளும் சிறப்பாக வீக்கத்தைக் குறைக்கும் தன்மையைப் பெற்றுள்ளன என்று எங்களுடைய ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

வயிற்றுப்புண்ணுக்கு மருந்து
வயிற்றுப்புண், வயிற்றில் (குடலில்) அமிலம் அதிகம் சுரப்பதினால் ஏற்படுகிறது. சோற்றுச் கற்றாளைச் சோற்றின் சாறானது இந்த அமிலச் சுரப்பைக் குறைந்து வயிற்றுப்புண்ணைக் குணமாக்குகிறது. இச்செயற்கை, நவீன மருந்துவத்தில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள  (lansoprazole) என்ற மருந்தின் சய்கையை ஒத்துள்ளது.

கல்லீரலை வலுப்படுத்தும் மருந்துகள் :
கல்லீரல் உடல் உறுப்புக்களில் முக்கிய அங்கமாகும். இங்குதான் பல வேதியல் மாற்றங்கள் நடந்து உயிர் வாழ்விற்கு இன்றியமையாத நொதிகளும், மற்ற அரிய வேதியல் பொருள்களும் உண்டுபண்ணப்படுகின்றன. இது பழுதடைந்தால் உயிர் வாழ்வது மிகக் கடினமாகும். மஞ்சக்காமாலை நோய் கல்லீரல் பழுதடைவதால் ஏற்படுகிறது.

எலிகளுக்குக் கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) என்ற கரிமத்தைக் கொடுத்துக் கல்லீரலின் செயல் வன்மை குறையச் செய்யப்படுகிறது. இந்த எலிகளுக்குச் சித்த மருந்துகளான கரிசாலை, மஞ்சள், கடுக்காய் போன்ற மருந்துகளைக் கொடுக்கும் பொழுது இதன் செயல்திறன் அதிகரிக்கப்படுகிறதா என்று கண்டறியப்படுகிறது. இதற்காகக் குருதியிலுள்ள நொதிகளின் அளவையும், ஈரலின் நொதிகளின் அளவையும், அவைகளின் கொழுப்புச் சத்து அளவையும், ஈரலின் அங்க அமைப்புகளின் மாற்றங்களையும் கொண்டு ஆராயப்படுகிறது. செயல் இழந்த ஈரலை வன்மைப் படுத்துவதில் கரிசாலை முதலாவதாகவும், அதன்பின் மஞ்சளும் கடுக்காயும் சிறப்புற்று விளங்குகின்றன. ஆகவேதான் கரிசாலை மஞ்சக் காமாலை நோயைக் குணமாக்குவதில் தலைசிறந்ததாக உள்ளது.


இருதயத்தை வன்மைப்படுத்தும் மருந்துகள்
இருதயத் துடிப்பு உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகும். தாபித நிலையில் இதன் செயல்திறன் குறைகிறது. இதன் வன்மையைப் பெருக்குவதற்குச் சித்த மருந்துகள் பயன்படுகின்றன. சிவப்பு அரளி, மஞ்சள் அரளி ஆகியவற்றின் வேர்களையும் இலைகளையும் சாராயத்துடன் சேர்த்துப் பிரிக்கும்பொழுது கிடைக்கும் உயிர்ச்சத்து தவளையின் இருதயத் துடிப்பைக் குறைந்த அளவில் மிகைப்படுத்துகின்றது, இதுபோலவே நரிவெங்காயமும் இருதயத் துடிப்பின் தன்மையை மிகைப்படுத்துகிறது இவைகளில் கார்டியாக் கிளைகோசைடுகள் என்ற உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன இவைகளை அதிகமாகச் செலுத்தினால் இருதயத் துடிப்பை நிற்கச்செய்கிறது. சாதாரண எலிகளுக்கு இலைகளைக் கொடுக்கும்பொழுது இடது இருதய அறையின் நியூக்ளிக் அமிலங்கள் (DNA and RNA) புரதங்களின் அளவைக் கூட்டுகின்றன. இம் மாற்றங்கள் இருதயம் அதிகமாக வேலை செய்வதினால் ஏற்படும் மாற்றங்களை ஒத்துள்ளன.

பூஞ்சக்ககாளானுக்குச் சித்த மருந்து (Anti-fungal drugs) :
பூஞ்சக்காளான்களினால் தோல் அரிப்பும் நீர்க்கசிவும் ஏற்படுகின்றன. இதற்குச் சிறந்த மருந்துகள் நவீன மருத்துவத்தில் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. žமை அகத்தியின் (Cassia alata) இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப் பூச இவ்வகை நோய்கள் குணமாகின்றனவென்று சித்த நூல்கள் கூறுகின்றன.
இம்மருந்தை 15 வகைப் பூஞ்சக்களான்களுடன் சேர்த்து வளர்க்கும் பொழுது இவைகளின் வளர்ச்சியை இந்த இலைச்சாறு குன்றச்செய்வதில்லை. ஆனால் எலுமிச்சம்பழம் சாறுடன் žமை அகத்தியின் இலைகளை அரைத்துப் பிழிந்த சாறு இரண்டு வகைப் பூஞ்சக்காளான்களைக் கொல்கிறது. இந்த இலைகளைப் பெட்ரோலியம் ஈதர் குளோரோபார்ம், சாராயம் மற்றும் தண்ருடன் ஒன்றன்பின் ஒன்றாகக் காய்ச்சி வடித்துப் பகுத்துப் பிரித்தெடுக்கும் பொழுது நீரில் கிடைக்கும் உயிர்ச்சத்து 8 வகைப் பூஞ்சக் காளான்களையும், சாராயத்தில் பிரித்தெடுக்கும் உயிர்ச்சத்து 7 வகைப் பூஞ்சக்காளான்களையும், மற்றவைகள் 5 வகைப் பூஞ்சக் காளான்களையும் கொல்லுகின்றன. சாராயத்திலும் தண்ர் பகுதியின் உயிர்ச்சத்தில் பிளேவனாயிடல் கிளைகோசைடுகள் உள்ளன.

இந்த ஆக்கபூர்வமான ஆராய்ச்சியின் பயனாக அபூர்வ சித்த மருந்துகளின் சிறப்புகள் தெளிவாக்கப்பட்டு, இவைகளின் நற் பயன்கள் நவீன மருந்துகளுடன் ஒப்புநோக்கப்பட்டு, வெளிநாட்டவரும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு மேலே குறிப்பிட்ட மருந்துகள் மேம்பட்டு விளங்குகின்றன.

Previous Post Next Post